1. சர்வதேச போதைப் பொருள் ஒழிப்பு தினத்தையொட்டி சென்னையில் விழிப் புணர்வு ஓட்டத்தை வெள்ளிக்கிழமை (ஜூன் 26) தொடங்கிவைத்த முதல்வர் ஜோசப் விஜய், பொது மக்களுடன் இணைந்து ஓடினார்.
2. வங்கதேசத்தின் இறையாண்மையைப் பாதுகாப்பதற்கும், அந்நாட்டின் உள்விவகாரங்களில் வெளிநாடுகள் தலையிடு வதை நிராகரிப்பதற்கும் சீனா முழு ஆதரவளிப்பதாக அந்நாட்டு அதிபர் ஷி ஜின்பிங் தெரிவித்தார்.
(i) வங்கதேச பிரதமராக கடந்த பிப்ரவரியில் பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக சீனாவுக்கு அரசு முறைப் பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் தாரிக் ரஹ்மானை, பெய்ஜிங்கில் சந்தித்துப் பேசிய ஷி ஜின்பிங் இவ்வாறு தெரிவித்தார்.
(ii) இதேபோல், 'ஒரே சீனா' கொள்கைக்கு வங்கதேசம் உறுதியான ஆதரவு அளிப்பதாகவும், தைவானை சீனாவின் ஒருங்கிணைந்த பகுதியாக அங்கீகரிப்பதாகவும் தாரிக் ரஹ்மான் தெரிவிக்கார்
(iii) இச்சந்திப்பின்போது, சீனாவின் லட்சிய திட்டமான 'பெல்ட் அண்ட் ரோடு’ திட்டத்தில் இரு நாடுகளும் இணைந்து செயல்படுவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. மேலும், வங்கதேசம், மியான்மர், சீனாவை இணைக்கும் புதிய பொருளாதார வழித்தடத்தை உருவாக்குவது குறித்தும் ஷி ஜின்பிங் முன்மொழிந்தார்.
(iv) இப்பயணத்தின் முக்கிய அம்சமாக, வங்கதேசத்தின் மிக முக்கிய நீர் ஆதாரமாக விளங்கும் தீஸ்தா நதிநீர் மேலாண்மை மற்றும் சீரமைப்புத் திட்டத்தில் இணைந்து பணியாற்ற இரு நாடுகளும் ஒப்புக்கொண்டுள்ளன. மேலும், வர்த்தகம், முதலீடு, கல்வி உள்ளிட்ட துறைகளில் இரு நாடுகளுக்கும் இடையே 13 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையொப்பமாகின.
3. ஜெர்மனியில் உலக ஜூனியர் துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப்பில், இந்தியா 7 தங்கம், 8 வெள்ளி, 9 வெண்கலம் என, 24 பதக்கங்களுடன் முதலிடம் பிடித்தது.
4.’போதைப் பொருள் கடத்தல்காரர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் மீது கடுமையான நடவடிக்கையை மேற்கொள்ளவும், போதைப் பொருள் கும்பல் தப்பிக்க பயன்படுத்தும் சட்டத்திலுள்ள பிரிவுகளை வலுப்படுத்தும் வகையிலும் போதைப் பொருள் மற்றும் மனநல பாதிப்பு மருந்துகள் தடுப்பு (என்டிபிஎஸ்) சட்டத்தில் திருத்தங்களை மேற்கொண்டு, அதை வலுப்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது' என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார். மேலும், 'இந்தத் திருத்தங்கள் தொடர்பாக மாநிலங்கள் தங்களின் கருத்துகளைப் பகிர வேண்டும்' என்றும் அவர் கேட்டுக் கொண்டார். போதைப் பொருள் தடுப்பு ஒருங்கிணைப்பு மையத்தின் (என்சிஓஆர்டி) 10-ஆவது உயர் நிலைக் கூட்டம் தில்லியில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற அமித் பேசியதாவது:
(i) நாட்டில் போதைப் பொருள் புழக்கத்தைக் கட்டுப்படுத்தவும், கடத்தல்களைத் தடுக்கவும் பாதுகாப்பு முகமைகள் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றன.
(ii) கடந்த 2004 முதல் 2014-ஆம் ஆண்டு வரை நாட்டில் 26 லட்சம் கிலோ அளவில் செயற்கை (சிந்தடிக்) போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. ஆனால், 2014 முதல் 2026-ஆம் ஆண்டு வைர 1.18 கோடி கிலோ அளவில் செயற்கை போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. 2004 முதல் 2014-ஆம் ஆண்டு வரை பறிமுதல் செய்யப்பட்ட போதைப் பொருள்களின் மதிப்பு ரூ.40,000 கோடி யாகும். அதே நேரம், 2014 முதல் 2026-ஆம் ஆண்டு வரை பறிமுதல் செய்யப்பட்ட போதைப் பொருள்களின் மதிப்பு ரூ.1.84 லட்சம் கோடியாகும். இது, போதைப் பொருள் கடத்தலுக்கு எதிராக நடவடிக்கை சீராக மேம்பட்டு வருவதைக் காட்டுகிறது.
(iii) இந்தச் சூழலில், போதைப் பொருள் கடத்தல்காரர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் மீது கடுமையான நடவடிக்கையை மேற்கொள்ள, போதைப் பொருள் தடுப்பு குறித்த என்டிபிஎஸ் சட்டத்தை வலுப்படுத்தும் நோக்கில், அந்தச் சட்டத்தை மத்திய நிதியமைச்சகம் மறுஆய்வு செய்து வருகிறது என்றார்.
(iv) மேலும், இந்த நிகழ்வில் போதைப் பொருள் கடத்தலுக்கு எதிராக 'கண்டறிதல்; தடுத்தல்; அழித்தல்' என்ற மும்முனை அணுகுமுறையை அமித் ஷா அறிமுகம் செய்தார். போதைப் பொருள் கடத்தல்காரர்களுக்கு எதிராக கடுமையான அணுகுமுறையைக் கடைப்பிடிக்கவும் கேட்டுக்கொண்டார்.
(v) 3 ஆண்டு தொலைநோக்கு திட்டம்:
● செயற்கை போதைப் பொருள் புழக்கத்தை தீவிரமாக தடுக்கும் வகையில், பாதுகாப்பு முகமைகளின் திறனை வலுப்படுத்துதல், ரகசிய வலைதள (டார்க் நெட்) மூலமான போதைப் பொருள் கடத்தல் தடுப்பு, எல்லை தாண்டிய கடத்தல்கள் மற்றும் போதைப் பொருள் தொடர்பான பிற அச்சுறுத்தல்களை திறம்பட கையாளும் வகையிலான நடவடிக்கைகளை உள்ளடக்கிய அடுத்த 3 ஆண்டுகளுக்கான (2026 - 2029) தொலை நோக்குத் திட்ட ஆவணத்தையும் நிகழ்ச்சியில் அமித் ஷா வெளியிட்டார்.
5. குறைந்த விலையிலான எஃகு பொருள்களை இந்தியாவுக்குள் இறக்குமதி செய்யும் விவகாரத்தில் சீனா, ரஷியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் மீது பொருள் குவிப்புக்கு எதிரான விசாரணையை தொடங்கவுள்ளதாக மத்திய வர்த்தக அமைச்சகம் தெரிவித்தது.
(i) இதுதொடர்பாக ஜேஎஸ்டபுள்யூ, ஜேஎஸ்டபுள்யூ விஜயநகர் மெட்டாலிக்ஸ் மற்றும் ஜிண்டால் ஆகிய நிறுவனங்கள் அளித்த புகாரையடுத்து, இந்த நடவடிக்கையை வர்த்தக அமைச்சகம் மேற்கொள்ளவுள்ளது.
(ii) அந்தப் புகாரில், 'அதிக வெப்ப நிலையில் வடிவமைக்கப்பட்ட எஃகு பொருள்கள் இந்தியாவுக்குள் குறைந்த விலையில் இறக்குமதி செய்யப்படுவதால் இந்தத் தொழிலைச் சார்ந்திருக்கும் உள்நாட்டு நிறுவனங்கள் கடுமையாக பாதிப்படையும்' என குறிப்பிடப்பட்டது.
(iii) இதையடுத்து, கடந்த 2022 முதல் 2025 வரையிலான எஃகு பொருள்கள் இறக்குமதி தரவுகளை பரிசீலித்து வர்த்தக நிவாரணங்களுக்கான தலைமை இயக்குநரகம் (டிஜிடிஆர்) விசாரணையைத் தொடங்கவுள்ளது. இதுகுறித்து டிஜிடிஆர் வெளியிட்ட அறிவிக்கையில் கூறப் பட்டிருப்பதாவது:
● வழக்கமான சந்தை விலையைவிட மிகவும் குறைவான விலையில் சீனா, ரஷியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளில் இருந்து எஃகு பொருள்கள் இந்தியாவுக்குள் இறக்குமதி செய்யப்பட்டிருப்பது முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
● இந்தியாவுக்குள் மேற்கூறிய நாடுகளைச் சேர்ந்த ஏற்றுமதியாளர்கள் பொருள் குவிப்பு செயல்பாடுகளில் ஈடுபட்டதற்கான ஆதாரம் கிடைத்துள்ளது.
● எனவே, இந்த விவகாரம் தொடர்பாக சில எஃகு நிறுவனங்கள் அளித்த புகார்கள் மற்றும் முதல்கட்ட விசாரணையில் கிடைத்த ஆதாரங்களைக் கொண்டு சீனா, ரஷியா மற்றும் ஜப்பானிடம் பொருள் குவிப்புக்கு எதிரான விசாரணை தொடங்கப்படவுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டது.
● இதுதவிர செயற்கை சீறுநீரக கருவிகள் (டயாலைசர்) சீனா மற்றும் மலேசியாவில் இருந்து அதிகளவில் இறக்குமதி செய்வதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு தொடர்பாக விசாரித்து வருவதாகவும் டிஜிடிஆர் வெளியிட்ட மற்றொரு அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
● குறைந்த விலையிலான பொருள்கள் அதிகளவில் இறக்குமதி செய்யப்படுவதால் உள் நாட்டு வர்த்தகத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதா என்பதை கண்டறிய பொருள் குவிப்பு விசாரணை மேற்கொள்ளப்படுகிறது. நாட்டில் நியாயமான வர்த்தக நடைமுறைகள் பின்பற்றப்படுவதை உறுதி செய்யவே இந்த விசாரணை நடத்தப்படுகிறது.
6. உள்நாட்டு தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட 'நேத்ரா' வான்வழி முன்னெச்சரிக்கை மற்றும் கட்டுப்பாட்டு அமைப்புக்கு இந்திய விமானப்படை இறுதிச் செயல்பாட்டு அனுமதி சான்றிதழ் அளித்துள்ளது.
(i) பெங்களூரில் நடைபெற்ற விழாவில், ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (டிஆர்டிஓ) வடிவமைத்து, தயாரித்துள்ள 'நேத்ரா' வான்வழி முன்னெச்சரிக்கை மற்றும் கட்டுப்பாட்டு அமைப்பு, அதற்கு வழங்கப்பட்டுள்ள இறுதிச் செயல்பாட்டு அனுமதி சான்றிதழை விமானப் படையின் தலைமை தளபதி அவதேஷ்குமார் பார்தி அறிமுகம் செய்தார்.
(ii) 2004-ஆம் ஆண்டில் இந்த திட்டத்தை வடிவமைக்க அனுமதி அளிக்கப்பட்டு, 22 ஆண்டுகள் கழித்து இறுதிச் செயல்பாட்டு அனுமதி சான்றிதழை இந்திய விமானப்படை வழங்கியுள்ளது.
(iii) புதிதாக அனுமதி அளிக்கப்பட்டுள்ள வான்வழி முன்னெச் சரிக்கை மற்றும் கட்டுப்பாட்டு அமைப்பு இந்திய விமானப்படையின் 6 போர் விமானங்களில் பொருத்தப்பட்டுள்ளது.
7. செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்ப வாய்ப்புகளை உருவாக்குவது தொடர்பான கூட்டறிக்கையில் இந்தியா உள்ளிட்ட 35 நாடுகள் கையொப்பமிட்டன.
(i) அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் நடைபெற்ற இரண்டாவது பேக்ஸ் சிலிக்கா மாநாட்டில் இதற்கான உடன்படிக்கை எட்டப்பட்டது. இந்தியா சார்பில் மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறைச் செயலர் எஸ்.கிருஷ்ணன், வெளியுறவு விவகாரங்கள் துறையின் கூடுதல் செயலரும் இந்திய தொழிற் சாலைகளின் பிரதிநிதியுமான நாகராஜ் நாயுடு பங்கேற்றனர்.
(ii) முன்னதாக, பேக்ஸ் சிலிக்கா முன்னெடுப்பில் ஆர்ஜென்டீனா, ஜெர்மனி, நெதர்லாந்து, சிலி, கோஸ்டா ரிக்கா, கிரீஸ், கஜகஸ்தான், பனாமா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் இத்தாலி ஆகிய நாடுகள் இணைந்தன.
(iii) ஏஐ தொழில்நுட்ப அணுகல், செமிகண்டக்டர், எரிசக்தி மற்றும் முக்கிய கனிமங்களின் உற்பத்தி மற்றும் விநியோகச் சங்கிலி மேம்பாடு ஆகியவற்றுக்காக கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பேக்ஸ் சிலிக்கா முன்னெடுப்பை அமெரிக்கா தொடங்கியது. கடந்த பிப்ரவரி மாதம் இந்தியாவில் நடைபெற்ற ஏஐ உச்சிமாநாட்டின்போது இந்த முன்னெடுப்பில் இந்தியா இணைந்தது. தற்போது இந்தியா, ஜப்பான், ஆஸ்திரேலியா, பிரிட்டன், தென் கொரியா, இஸ்ரேல், ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட 35 நாடுகள் பேக்ஸ் சிலிக்கா முன்னெடுப்பில் உறுப்பினர்களாக உள்ளன.
8. ஜப்பான் பிரதமர் சனே தகாய்ச்சி 3 நாள் பயணமாக அடுத்த வாரம் இந்தியாவுக்கு வருகிறார். அப்போது இருநாடுகள் இடையிலான உறவை மேலும் வலுப்படுத்துவது தொடர்பாக முக்கிய ஆலோசனைகள் நடத்தப்பட இருக்கின்றன. இது தொடர்பாக மத்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:
(i) பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பை ஏற்று ஜப்பான் பிரதமர் சனே தகாய்ச்சி இந்தியா வருகிறார். தில்லியில் ஜுலை 1 முதல் 3-ஆம் தேதி வரை நடைபெறும் 16-ஆவது இந்தியா-ஜப்பான் ஆண்டு மாநாட்டில் பங்கேற்கிறார். இரு நாட்டு வர்த்தகம், பொருளாதாரம், பாதுகாப்பு, முதலீட்டு ஒத்துழைப்பை அதிகரிப்பதில் இந்த மாநாடு முக்கியப் பங்கு வகிக்கும். இது தவிர பிராந்திய, சர்வதேச விவகாரங்களில் இருதரப்பு நலன்கள் சார்ந்த பிரச்னைகள் விவாதிக்கப்பட இருக்கின்றன.
(ii) ஜப்பான் பிரதமர் சனே தகாய்ச்சி இப்போதுதான் முதல்முறையாக இந்தியாவுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொள்கிறார்.
(iii) முன்னதாக, கடந்த 2025 ஆகஸ்ட் மாதத்தில் பிரதமர் நரேந்திர மோடி ஜப்பானுக்கு பயணம் மேற்கொண்டு டோக்கியோவில் நடைபெற்ற இந்தியா-ஜப்பான் ஆண்டு மாநாட்டில் பங்கேற்றார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
9. மருந்துகள் மற்றும் அழகு சாதனங்கள் சட்டம் 1940, உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய சட்டம் 2006 ஆகியவற்றின் கீழான பல சிறிய மற்றும் தொழில்நுட்ப ரீதியிலான விதி மீறல்களுக்கான தண்டனையை மத்திய அரசு ரத்து செய்துள்ளது.
(i) அதேநேரம், பொதுமக்களின் உடல் நலனுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையிலான விதி மீறல்கள் மற்றும் குற்றங்களுக்கான கடுமையான தண்டனைகளை தொடர வகை செய்யப்பட்டுள்ளது.
(ii) நாட்டில் வணிகம் செய்வதை எளிதாக்கும் வகையில் நிறுவனங்கள் செய்யும் சிறு குற்றங்களுக்காக விதிக்கப்படும் சிறைத் தண்டனைகளை அபராதங்களாக குறைபதற்காக மத்திய அரசு கொண்டுவந்த 'மக்கள் நம்பிக்கை சட்டம்' என்ற சீர்திருத்தத்தின் அடிப்படையில் இந்த நடவடிக்கையை மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் மேற்கொண்டுள்ளது. இதுகுறித்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
● மத்திய அரசு கொண்டுவந்த மக்கள் நம்பிக்கை சட்டத்தின் அடிப்படையில், உணவு, மருந்துகள் மற்றும் அழகுசாதனங்கள் வர்த்தகத்தில் குறிப்பிட்ட தொழில் நுட்ப ரீதியிலான மற்றும் நடை முறை விதி மீறல்களுக்கு முன்னர் மேற்கொள்ளப்படும் குற்றவியல் நடவடிக்கை நடைமுறைகள் தற்போது நிர்வாக ரீதியில் தீர்வு காணும் நடைமுறையாக மாற்றி திருத்தப்பட்டுள்ளது.
● முக்கியமாக, ஏதேனும் ஒரு மருந்து அல்லது அழகுசாதனப் பொருளை விளம்பரப் படுத்துவதற்கு அரசு ஆய்வாளரின் அறிக்கையைப் பயன்படுத்தினால் ரூ.1 லட்சம் வரை அபராதம் விதிக்க வகை செய்த மருந்துகள் மற்றும் அழகுசாதனப் பொருட்கள் சட்டத்தின் 29-ஆவது பிரிவு நீக்கப்பட்டுள்ளது.
● அதுபோல, குறைந்த அளவில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய அழகுசாதன பொருள்கள் உற்பத்தி அல்லது விற்பனை, தரத்தில் சிறிய அளவில் குறைபாடு, குறியீடுகள் அல்லது அடையாளமிடலில் குறைபாடுகள் உள்ளிட்ட விதி மீறல்கள், நிர்வாக ரீதியில் தீர்வு காணும் வகையிலான நடை முறையாக மாற்றப்பட்டுள்ளது. விற்பனை பதிவுகள் பராமரிப்பு, தகவல் சமர்ப்பிப்பு தொடர்பான விதி மீறல்கள், உணவு பாதுகாப்பு அலுவலருக்கு எதிரான தவறான புகார்கள் மீதான குற்றவியல் நடைமுறைகளும், தற்போது நிர்வாக ரீதியில் தீர்வு காணும் நடைமுறையாக மாற்றப்பட்டுள்ளது.
● அதே நேரம், நுகர்வேரின் பாதுகாப்பை நேரடியாக பாதிக்கக்கூடிய கலப்பட அழகுசாதனங்கள் உற்பத்தி மற்றும் விற்பனைக்கு விதிக்கப்படும் கடுமையான தண்டனை நடைமுறைகள் இச்சட்டத்தின் கீழ் தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
● மருந்துகள் மற்றும் உணவு பாதுகாப்பு சட்டங்களின் கீழ் பறிமுதல் செய்யப்பட்ட பொருள்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் குற்றங்களுக்கான சிறைத் தண்டனை 6 மாதங்களிலிருந்து 3 மாதங்களாக குறைக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
10. நெருங்கிய உறவினர்களுக்கு இடையிலான திருமணங்கள் மீதான ஸ்வீடனின் புதிய சட்டப்பூர்வத் தடை மற்றும் இந்தியாவில் இம்முறையினால் ஏற்படும் கடுமையான உடல்நலப் பாதிப்புகள் குறித்த விவரங்கள்.
(i) ஸ்வீடனின் முக்கிய சட்டப்பூர்வத் தடை
● மரபணு குறைபாடுகளைத் தடுப்பதற்காக, நெருங்கிய இரத்த உறவினர்களுக்கு இடையிலான திருமணங்களை ஸ்வீடன் அதிகாரப்பூர்வமாகத் தடை செய்துள்ளது.
● ஸ்வீடன் நாடாளுமன்றம் ஒருமனதாக வாக்களித்து இச்சட்டத்தை நிறைவேற்றியது.
● இப்புதிய சட்டம் 2026 ஜூலை 1 முதல் நடைமுறைக்கு வருகிறது.
● நடைமுறைக்கு வந்த பிறகு, தனிநபர்கள் ஸ்வீடன் விசா அல்லது குடியுரிமைக்கு விண்ணப்பிக்கும்போது, வெளிநாடுகளில் (இந்தியா உட்பட) நடத்தப்பட்ட இத்தகைய திருமணங்களை ஸ்வீடன் அரசாங்கம் அங்கீகரிக்க மறுத்துவிடும்.
● 2026 ஜூலை 1-க்கு முன் ஸ்வீடனுக்குள் சட்டப்பூர்வமாக நடத்தப்பட்ட திருமணங்கள் தொடர்ந்து செல்லுபடியாகும் என அங்கீகரிக்கப்படும்.
(ii) இந்தியச் சூழலும் மரபுகளும்
● இந்தியாவில், நெருங்கிய உறவினர்களை (உதாரணமாக, நெருங்கிய உறவுமுறை கொண்ட மாமன்/அத்தை பிள்ளைகள்) திருமணம் செய்துகொள்வது பல தலைமுறைகளாகத் தொடரும் ஒரு பாரம்பரிய நடைமுறையாக உள்ளது.
● குடும்பச் சொத்து வெளியே செல்வதைத் தடுக்கவோ அல்லது பெற்றோரின் விருப்பத்திற்கு மாறாகப் பிள்ளைகள் வேறு துணையைத் தேர்ந்தெடுப்பதைத் தடுக்கவோ குடும்பங்கள் பெரும்பாலும் இத்தகைய திருமணங்களை ஊக்குவிக்கின்றன.
● நவீன டிஜிட்டல் யுகத்தில் இம்முறை குறைந்திருந்தாலும், தென்னிந்திய மாநிலங்களில் இது இன்னும் பரவலாகக் காணப்படுகிறது; இதில் தமிழ்நாடு முதலிடத்திலும், அதைத் தொடர்ந்து ஆந்திரப் பிரதேசம் மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களும் உள்ளன.
(iii) நிரூபிக்கப்பட்ட மருத்துவ மற்றும் மரபணு அபாயங்கள்
● 'தி லான்செட்' (The Lancet) என்ற பிரிட்டிஷ் மருத்துவ இதழில் 2013-ல் வெளியான ஒரு ஆய்வின்படி, நெருங்கிய உறவினர்களுக்குப் பிறக்கும் குழந்தைகளுக்கு உடல் ரீதியான பிறவிக் குறைபாடுகள் ஏற்படும் அபாயம் இருமடங்காக உள்ளது.
● மத்திய சுகாதார அமைச்சகத்தின் தரவுகள் (1990–2005) படி, நெருங்கிய உறவினர்களுக்கு இடையிலான திருமணங்கள் குழந்தைகளிடம் ஏற்படும் செவித்திறன் இழப்புக்கு ஒரு முக்கிய காரணமாக உள்ளன. கர்நாடகாவில், செவித்திறன் குறைபாடுள்ள குழந்தைகளில் 30% பேர் நெருங்கிய உறவுமுறை கொண்ட பெற்றோருக்குப் பிறந்தவர்கள்; அதேவேளையில் தமிழ்நாடு மற்றும் ஆந்திரப் பிரதேசத்தில் இச்சதவீதம் 20% ஆக உள்ளது.
● இந்தியாவில் ஆண்டுதோறும் சுமார் 6 முதல் 8 லட்சம் குழந்தைகள், குறிப்பாக நெருங்கிய உறவினர்களுக்கு இடையிலான திருமணங்களால் செவித்திறன் குறைபாடுகளுடன் பிறக்கின்றனர்.
● இம்முறையுடன் தொடர்புடைய பல வாழ்வை மாற்றக்கூடிய பாதிப்புகள் பின்வருமாறு:
● சிஸ்டிக் ஃபைப்ரோஸிஸ் (Cystic Fibrosis): நுரையீரல் மற்றும் செரிமான மண்டலத்தைப் பாதிக்கும் நோய்.
● தலசீமியா (Thalassemia): ஒரு கடுமையான இரத்தக் கோளாறு.
● டே-சாக்ஸ் நோய் (Tay-Sachs Disease): மூளை மற்றும் நரம்புகளைப் பாதிக்கும் உயிருக்கு ஆபத்தான மரபணுக் கோளாறு.
● உடல் மற்றும் மன ரீதியான சவால்கள்: தசை பலவீனம், நடக்கும் மற்றும் பேசும் திறனை இழத்தல், நடுக்கம் மற்றும் பல்வேறு மனநலப் பிரச்சினைகள்.
(iv) சமூக-பொருளாதாரக் காரணிகள்
● வசதி படைத்த குடும்பங்கள், தங்கள் சொத்துக்களைக் குடும்ப வட்டத்திற்குள்ளேயே தக்கவைத்துக்கொள்ள இத்தகைய திருமணங்களைப் பயன்படுத்துகின்றன.
● மறுபுறம், வழக்கமான இந்தியத் திருமணங்களுடன் தொடர்புடைய அதிகப்படியான செலவுகளைக் குறைப்பதற்காகவும் சில குடும்பங்கள் இத்தகைய திருமணங்களைத் தேர்ந்தெடுக்கின்றன.
● சாதி அடிப்படையிலான திருமண இணையதளங்கள், நெருங்கிய உறவினர்களுக்கு இடையிலான இத்தகைய திருமணங்களை எளிதாக்கும் ஒரு நவீனக் கருவியாகத் திகழ்கின்றன.
(v) சீர்திருத்தத்திற்கான பரிந்துரைகள்
● இம்முறை தொடர்ந்து பின்பற்றப்பட்டால், ஆரோக்கியமான மற்றும் வலுவான மனிதவளத்தை இந்தியா உருவாக்க முடியாமல் போகும்.
● ஆரம்ப சுகாதார நிலையங்கள், மருத்துவக் கல்லூரிகள், பள்ளிகள் மற்றும் சமூக ஊடகங்கள் வாயிலாகப் பரவலான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை மத்திய மற்றும் மாநில அரசுகள் நடத்த வேண்டிய அவசரத் தேவை உள்ளது.
● தடுக்கக்கூடிய குறைபாடுகளிலிருந்து வருங்காலத் தலைமுறையினரைப் பாதுகாக்க, நீண்டகால உயிரியல் ரீதியான ஆபத்துகள் குறித்து மக்களுக்கு உரிய ஆலோசனைகள் வழங்கப்பட வேண்டும்.
11. இந்தியா மற்றும் சீனா இடையிலான சிக்கலான மற்றும் தவிர்க்க முடியாத உறவு குறித்த பகுப்பாய்வு.
(i) புவியியல் சார்ந்த மாற்ற முடியாத எதார்த்தம்
● முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் ராஜதந்திரக் கோட்பாடு: ஒரு எதிரியிடமிருந்து விலகி இருக்கவோ அல்லது நண்பரை மாற்றிக்கொள்ளவோ முடியும்; ஆனால் அண்டை நாடுகளை மாற்ற முடியாது, ஏனெனில் புவியியல் அமைப்பு நிரந்தரமானது.
● இந்த எதார்த்தம் பாகிஸ்தான் மற்றும் சீனா ஆகிய இரு நாடுகளுக்கும் பொருந்தும்; இரண்டு பழமையான நாகரிகங்களாக, இந்தியாவும் சீனாவும் பல நூற்றாண்டுகளாக வரலாற்று மற்றும் கலாச்சாரத் தொடர்புகளைப் பகிர்ந்து கொண்டுள்ளன, அவற்றை புறக்கணிக்க முடியாது.
(ii) வரலாற்று ரீதியான ஆதரவும் நவீன கால விரிசல்களும்
● 1962-ல் சீனாவின் ஆக்கிரமிப்பு நடவடிக்கையைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் முற்றிலும் சீர்குலைந்தன.
● ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் கம்யூனிச சீனா நிரந்தர இடத்தைப் பெறுவதற்கு இந்தியாவின் ஆதரவும் வலியுறுத்தலுமே வழிவகுத்தன; ஆனால் இந்த உண்மையை நவீன சீனா "மறந்துவிட"த் தேர்ந்தெடுத்துள்ளது.
● ஜூன் 5, 2020 அன்று கல்வான் பள்ளத்தாக்கில் ஏற்பட்ட மோதலுக்குப் பிறகு உறவுகள் மீண்டும் கடுமையாக மோசமடைந்தன; இது இந்தியா பல்வேறு சீன செயலிகளுக்குத் (apps) தடை விதிக்கவும், முக்கிய முதலீடுகளை நிறுத்தவும் வழிவகுத்தது.
(iii) நீடிக்கும் நம்பிக்கையின்மை
● ஆகஸ்ட் 2024-ல் ஜோகன்னஸ்பர்க்கில் நடைபெற்ற பிரிக்ஸ் (BRICS) உச்சிமாநாட்டின் போது பிரதமர் மோடிக்கும் அதிபர் ஜி ஜின்பிங்கிற்கும் இடையே நடைபெற்ற சந்திப்பு, எல்லைப் பதற்றங்களைத் தற்காலிகமாகத் தணிக்கவும், சீனாவிடமிருந்து வெளிப்பட்ட விரோதப் போக்குடைய கருத்துகளைக் குறைக்கவும் உதவியது.
● தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் மற்றும் வெளியுறவு அமைச்சர் வாங் யி ஆகியோருக்கு இடையே சமீபத்தில் உயர்மட்ட சந்திப்புகள் நடைபெற்ற போதிலும், உறவை இயல்பு நிலைக்குக் கொண்டுவருவதில் ஆழமான "நம்பிக்கையின்மை" ஒரு முக்கிய தடையாக நீடிக்கிறது.
● எல்லைப் பிரச்சினையை ஒதுக்கி வைத்துவிட்டு, முழு அளவிலான இருதரப்பு பேச்சுவார்த்தைகள் மற்றும் வர்த்தகத்தை மீண்டும் தொடங்க வேண்டும் என்று சீனா தற்போது இந்தியாவை வற்புறுத்தி வருகிறது; ஆனால் இந்த நிலைப்பாட்டை இந்தியா ஏற்றுக்கொள்வது கடினமாக உள்ளது.
(iv) பொருளாதாரச் சார்ந்திருத்தல் மற்றும் உலகளாவிய அழுத்தம்
● அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகிய இரண்டும் சீனாவிலிருந்து இறக்குமதி செய்வதைக் குறைக்க நடவடிக்கை எடுத்துள்ளதால், சீனா அதிகரித்து வரும் பொருளாதார அழுத்தத்தை எதிர்கொண்டு வருகிறது.
● இதன் காரணமாக, தனது அதிகரித்த உற்பத்தியை விற்பனை செய்ய புதிய சந்தைகளைத் தேடும் கட்டாயத்தில் சீனா உள்ளது; எனவே, இந்தியாவுடனான வலுவான வர்த்தக உறவை ஏற்படுத்திக்கொள்வது பெய்ஜிங்கிற்கு ஒரு முன்னுரிமையாக மாறியுள்ளது.
● பாகிஸ்தானுடன் சீனா கொண்டுள்ள நெருக்கமான ராணுவ உறவுகள் மற்றும் இந்தியப் பெருங்கடல் மற்றும் வங்காள விரிகுடாவில் தனது ஆதிக்கத்தை விரிவுபடுத்தும் முயற்சிகள் ஆகியவற்றின் காரணமாக, சீனாவின் "நட்பு" குறித்து இந்தியா எச்சரிக்கையுடனேயே உள்ளது.
(v) உறவைப் பேணுவதன் அவசியம்
● பதற்றங்கள் நிலவினாலும், கனிமங்கள், உரங்கள் மற்றும் "அரிய வகை உலோகங்கள்" (Rare Earth Metals) உள்ளிட்ட முக்கியமான வளங்களுக்கு இந்தியாவுக்கு சீனா அவசியமானதாக உள்ளது.
● இந்த அத்தியாவசிய விநியோகச் சங்கிலிகளைப் பாதுகாப்பதற்கு, இரு தரப்புக்கும் இடையே நிலவும் "பரஸ்பர நம்பிக்கையின்மை" காலப்போக்கில் தீர்க்கப்பட வேண்டும் என்று வாதிடப்படுகிறது.
(vi) முடிவுரை: சுன் சூ (Sun Tzu) வகுத்த உத்தி
● பண்டைய சீன இராணுவ உத்தியலாளரான சுன் சூ-வின் 'தி ஆர்ட் ஆஃப் வார்' (The Art of War) எனும் நூலில் உள்ள, "எப்போது போரிட வேண்டும், எப்போது போரிடக்கூடாது என்பதை அறிபவரே வெற்றி பெறுவார்" என்ற கருத்தை இங்கே குறிப்பிடலாம். எப்போது களத்தில் இறங்க வேண்டும், எப்போது எதிர்த்து நிற்க வேண்டும் என்பதை உணர்ந்து செயல்படும் இந்த அணுகுமுறையே, சீனாவுடனான உறவைக் கையாள்வதில் இந்தியா தற்போது பின்பற்ற வேண்டிய சரியான உத்தியாகும்.
12. "வீட்டிலிருந்தே வேலை செய்யும்" (WFH) கலாச்சாரத்தின் உளவியல் மற்றும் சமூக ரீதியான பரிணாம வளர்ச்சி; இது முதலில் பெருந்தொற்றால் தூண்டப்பட்டு, பின்னர் பொருளாதாரக் காரணங்களுக்காக அரசாங்கத்தால் ஊக்குவிக்கப்பட்டது.
(i) பிரதமரின் வேண்டுகோள்
● தற்போதைய தேசிய மற்றும் சர்வதேச பொருளாதார நெருக்கடிகளைச் சமாளிப்பதற்கான ஒரு சிக்கனமான மற்றும் உத்திசார் நடவடிக்கையாக, வீட்டிலிருந்தே வேலை செய்யும் முறையைக் கடைப்பிடிக்குமாறு பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் நாட்டு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.
● கோவிட்-19 காலத்தில் இது ஊரடங்கு கட்டுப்பாட்டின் ஒரு பகுதியாக கட்டாயமாக்கப்பட்டிருந்தாலும், தற்போது இது பொருளாதார மீள்திறனுக்கான ஒரு கருவியாகப் பார்க்கப்படுகிறது.
(ii) ஆரம்பக்கட்ட "வரப்பிரசாத" காலம்
● தொடக்கத்தில், குறிப்பாக தகவல் தொழில்நுட்பத் (IT) துறையில் உள்ள ஊழியர்கள் இந்த மாற்றத்தை மிகுந்த உற்சாகத்துடன் வரவேற்றனர்.
● வீட்டிலிருந்தே வேலை செய்வது பயணச் செலவுகளையும், விலையுயர்ந்த அலுவலக உடைக்கான தேவையையும் தவிர்த்தது.
● இது ஊழியர்கள் வீட்டில் சமைத்த சூடான உணவை உண்ணவும், தங்கள் குழந்தைகளின் ஆன்லைன் கல்வி மற்றும் அன்றாட வளர்ப்பில் தீவிரமாக ஈடுபடவும் உதவியது.
● அலுவலகத்தில் தொடர்ந்து இருக்க வேண்டிய கட்டாயத்தால் ஏற்படும் சமூகக் கவலைகளும், "பப் கலாச்சாரம்" (pub culture) சார்ந்த சூழல்களும் தற்காலிகமாகத் தணிந்தன.
(iii) ஒரு "கூண்டு" போன்ற சூழலுக்கு மாறுதல்
● தனிப்பட்ட வாழ்க்கைக்கும் தொழில்முறைப் பொறுப்புகளுக்கும் இடையிலான எல்லை முழுமையாக மறைந்துபோனதே இதில் குறிப்பிடப்படும் மிக முக்கியமான குறைபாடாகும்.
● எந்த நேரத்திலும் கூட்டங்களில் (meetings) பங்கேற்க வேண்டிய சூழலால், ஊழியர்கள் "ஒரே நேரத்தில் இரண்டு குதிரைகளில் சவாரி செய்வது" போன்ற உணர்வைப் பெற்று சோர்வடைந்தனர்.
● பூனை தனது குட்டியை வாயில் கவ்விக்கொண்டு செல்வது போல, ஊழியர்கள் தங்கள் மடிக்கணினியை சமையலறைக்கும் உணவு மேசைக்கும் இடையே எடுத்துச் செல்ல வேண்டியிருந்தது; டிஜிட்டல் பிணைப்பிலிருந்து அவர்களால் தப்பிக்க முடியவில்லை.
● பலருக்கு, ஆரம்பத்தில் கிடைத்த சுதந்திரம் ஒரு "பறவைக் கூண்டில்" அடைபட்டது போன்ற உணர்வாக மாறியது; இதனால் மீண்டும் நேரடி அலுவலகத்திற்குச் செல்ல வேண்டும் என்ற ஏக்கம் ஏற்பட்டது.
(iv) பெண்கள் மற்றும் குடும்பங்கள் எதிர்கொண்ட சவால்கள்
● தொழில்முறை கூட்டங்கள், வீட்டு வேலைகள் மற்றும் குழந்தைகளின் இடையூறுகள் ஆகியவற்றைச் சமநிலைப்படுத்துவதில் பெண் ஊழியர்கள் மிகக் கடுமையான போராட்டத்தை எதிர்கொண்டனர்.
● பிரஷர் குக்கர் சத்தம், நாய்களின் குரைப்பு மற்றும் குடும்ப உரையாடல்கள் போன்ற வீட்டுச் சூழல் சார்ந்த சத்தங்கள் அடிக்கடி தொழில்முறைச் செயல்பாடுகளுக்கு இடையூறாக அமைந்தன; இது சங்கடத்தையும் மன அழுத்தத்தையும் ஏற்படுத்தியது.
● வீட்டில் பெரியவர்கள் இருந்தபோதிலும், தொழில்முறை கண்ணியத்தைக் காத்துக்கொள்ள முயற்சிக்கும் அதே வேளையில், சுறுசுறுப்பான குழந்தைகளை நிர்வகிப்பது ஒரு பெரும் சவாலாக அமைந்தது.
(v) உடல்நலம் மற்றும் உயிரியல் ரீதியான பாதிப்புகள்
● சர்வதேச வாடிக்கையாளர்களுக்காக இந்தியாவில் இருந்தபடி பணிபுரியும்போது, பெரும்பாலும் வெளிநாட்டு நேர மண்டலங்களைப் பின்பற்ற வேண்டியுள்ளது; இதனால் ஊழியர்கள் இரவு முழுவதும் விழித்திருக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.
● இரவில் வேலை செய்து பகலில் தூங்க முயற்சிப்பது மனித உயிரியல் இயல்புக்கு முரணானது; இது சீரற்ற தூக்கம் மற்றும் உணவுப் பழக்கங்களால் நீண்டகால உடல்நலப் பாதிப்புகளுக்கு வழிவகுக்கிறது.
(vi) அலுவலகத்தின் சமூகச் சூழலின் முக்கியத்துவம்
● மனிதர்கள் சமூக உயிரினங்கள்; அவர்களால் தனிமையில் சிறந்து விளங்க முடியாது.
● அலுவலகச் சூழலானது தேநீர் இடைவேளைகள், சக ஊழியர்களுடன் இணைந்து மதிய உணவு அருந்துதல் மற்றும் பிறந்தநாள் போன்ற முக்கிய நிகழ்வுகளைக் கொண்டாடுதல் உள்ளிட்ட அத்தியாவசியமான சமூகத் தொடர்புகளுக்கான வாய்ப்புகளை வழங்குகிறது; இவை ஆழமான நட்பையும் பரஸ்பர புரிதலையும் வளர்க்கின்றன.
● நன்கு பராமரிக்கப்படும் நவீன அலுவலகச் சூழல் ஒரு "இரண்டாவது வீடு" போலச் செயல்பட்டு, ஊழியர்களை ஊக்குவிப்பதோடு, கூட்டு வளர்ச்சி மற்றும் கற்றல் உணர்வையும் அளிக்கிறது.
(vii) முடிவுரை
● வீட்டிலிருந்து வேலை செய்வது (WFH) தற்காலிகப் பொருளாதார நன்மைகளை வழங்கக்கூடும் என்றாலும், மன அமைதி மற்றும் சமூகத் தொடர்புகளை இழப்பதே அதன் நீண்டகால விலையாக அமைகிறது.
● ஆரோக்கியமான மனித வாழ்க்கைக்குத் தேவையான சமநிலையை பாரம்பரிய அலுவலகக் கட்டமைப்பு வழங்குகிறது.